அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம்- மருத்துவர்கள்

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,199 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,30,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரேநாளில் 42,520க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை 2.72 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க மக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றாமல் நடந்துவந்தால் விரைவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாசிடிவ் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்படும் நிலை விரைவில் வரும் என அமெரிக்காவின் மருத்துவ நிபுணர் ஆண்டனி ஃபியூசி எச்சரித்துள்ளார். மேலும் தடுப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், அமெரிக்க அரசு கொரோனாவை கையாள்வதில் தவறான பாதையை நோக்கி செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் இல்லை எனக்கூறிய ஃபியூசி நிச்சயமாக மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.