அமெரிக்காவில் 3 மாதங்களுக்கு பிறகு குறைந்த கொரோனா உயிர்பலி!

coronavirus

அமெரிக்காவில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் மீண்ட நிலையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 749 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நவம்பர் மாதம் 29ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 822 ஆக இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000க்கு கீழ் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மே மாதத்துக்குள் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா மருந்து கிடைத்துவிடும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் பைஸர், மாடர்னா நிறுவனத்தின் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுவரும் நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ஒரே டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.