கருத்துக்கணிப்புகள் பொய்யாகுமா? ட்ரம்ப் மீண்டும் அதிபரா?

அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களின் மனநிலை மாறலாம் என சொல்லப்படுகிறது.

நவம்பர் 3ஆம் தேதி, உலக வல்லரசை ஆளப்போவது யார் என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிக்கும் நாள்.. சரியாக சொல்லப்போனால் வரும் செவ்வாய்கிழமை இல்லாமல் அடுத்து வரும் செவ்வாய்கிழமை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பல்வேறு கருத்து கணிப்புகளும் ஜோ பைடனே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் படி ஜோ பைடனுக்கு 52.5 சதவிகிதம் பேரும் ட்ரம்புக்கு 41.8 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த தேர்தலின் போது ட்ரம்பின் வெற்றிக்கு உதவியாக இருந்த மிச்சிகன்,‌பென்சில்வேனியா, விஸ்கான்ஸின் மாநிலங்களில் தற்போது ட்ரம்பை விட பைடனுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

இந்த மூன்று மாகாணங்களை கைப்பற்றினால் ஜோ பைடனின் வெற்றி எளிதாகிவிடும் என சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த தேர்தலிலும் கூட ஹிலாரியே வெற்றி பெறுவார் என்றே கருத்து கணிப்புகள் வெளியாகின, ஆனால் அதனை பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார். எனவே அதே நிலை இம்முறையும் திரும்பிவிடகூடாது என ஜனநாயக கட்சியினர் நினைக்கின்றனர். ஜனநாயக கட்சியினர் திரளாக வந்து முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி வாக்கினை பதிவு செய்து வந்தாலும் வாக்குப்பதிவு நாளன்று குடியரசு கட்சியினர் திரளாக வந்து வாக்களிப்பர் என சொல்லப்படுகிறது. எனவே இன்னும் இரண்டு வாரங்களுக்கு தீவிர கவனம் செலுத்தி ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என இரண்டு கட்சியினரும் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter