இந்தியர்களின் ஆதரவை இழக்கும் ஜனநாயக கட்சியினர்!

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் உள்ளனர். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி, அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்துக்கள். இவர்களின் வாக்குகளை கவர குடியரசு மற்றும் ஜனநாய கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் ஆதரவாளர்கள், ‘ட்ரம்புக்கு ஆதரவாக இந்துக்களின் குரல்கள்’ என்ற பிரசாரத்தை தொடங்கினர். இதற்கு போட்டியாக பிடனின் ஆதரவாளர்கள் தற்போது ‘பிடனுக்கான இந்து அமெரிக்கர்கள்’ என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

புளோரிடா, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் இந்தியர்களின் வாக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு உள்ள நட்புறவு உள்ளிட்டவை அமெரிக்க வாழ் இந்தியர்களை, குடியரசு கட்சி ஆதரவாளர்களாக மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையி இந்து அமெரிக்க அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த, அமெரிக்க வாழ் இந்துக்கள், அண்மை காலமாக குடியரசு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துரைத்துவருகின்றனர். ஜனநாயக கட்சியின் முற்போக்கு அணி, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறிவருவதுடன், அமெரிக்க வாழ் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனை அக்கட்சியின் தலைமை வேடிக்கை பார்க்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் ஆதரவை ஜனநாயக கட்சியினர், முழுமையாக இழக்க நேரிடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவிலும் இனி கையேந்தி பவன்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter