அமெரிக்கா வரலாற்றிலேயே ட்ரம்ப் நிர்வாகம்தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது: கமலா ஹாரிஸ்

kamala harris

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருப்பதாக ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சாடியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் நேரடி விவாதம் நடைபெற்றது. ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் ஆகியோர் கொரோனா வைரஸ், வெளியுறவுக் கொள்கை , சீனாவுடனான வர்த்தகப் போர், இனவெறி தாக்குதல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். பாதுகாப்பு கருதி வேட்பாளர்களுக்கு இடையே 12 அடி இடைவெளி இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.90 நிமிடங்கள் நடைபெற்ற விவாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இருவரும் அதிகமாக மோதிக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துவிட்டதாக கமலா ஹாரிஸ் சாடினார்.

அமெரிக்கா வரலாற்றிலேயே ட்ரம்ப் நிர்வாகம் தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்துவிட்டனர். பிரச்னையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டனர். இவ்வளவு நிகழ்ந்தும் ட்ரம்ப் நிர்வாகத்திடம் குறிப்பிடத்தகுந்த எந்த ஒரு திட்டமும் இல்லை. கமலா ஹாரிஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மைக் பென்ஸ், ட்ரம்ப் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறினார்.

kamala harris
Image: TimesofIndia

கொரோனா தடுப்பு மருந்து குறித்து பேசிய கமலா ஹாரிஸ், ட்ரம்ப் கூறினால் தடுப்பு மருந்தினை ஏற்க மாட்டேன், மருத்துவக்குழுவும் , விஞ்ஞானிகளும் உறுதி அளித்தால் மட்டுமே அந்த தடுப்பு மருந்தினை ஏற்பேன் எனக் கூற, கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் கூட ஜனநாயகக் கட்சியினர் அரசியல் செய்வதாக மைக் பென்ஸ் சாடினார்.

சீனாவுடனான வர்த்தக போரில் அமெரிக்கா தோல்வி அடைந்துவிட்டதாகவும் அதற்கு ட்ரம்பின் வரிக்கு வரி விதிக்கும் கொள்கையே காரணம் என்றும் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். அதற்கு, ஜோ பைடனே சீனாவின் ஆதரவாளர் என பென்ஸ் பதில் அளித்தார். இது தவிர இனவெறியால் நடக்கும் தாக்குதல் , காவல்துறை சீர்திருத்தம், வெளியுறவு கொள்கை, பொருளாதாரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதத்தை ஒப்பிடுகையில் இவர்களின் விவாதம் சிறந்ததாக இருந்தது என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பேசினார் என 59 சதவிகிதம் பேரும், பென்ஸ் சிறப்பாக செயல்பட்டதாக 38 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே:  ஹெச்1 பி விசாவுக்கு செல்வோர் ஓராண்டு மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய கெடுபுடி!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts