ஜோ பிடனின் பிரசார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனின், ‘டிஜிட்டல்’ பிரசார கமிட்டி தலைவராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மேதா ராஜ் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இணையம்வழியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் முயற்சியில் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இதற்காக டிஜிட்டல் பிரசார கமிட்டியை நியமித்த ஜோ பிடன், அதன் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேதா ராஜ் என்பவரை நியமித்துள்ளார்.

இந்த டிஜிட்டல் பிரசார கமிட்டி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கான பணியை திறம்பட செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் பிரசாரக் குழுவை வழிநடத்துவது ஒரு பெண், அதுவும் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியிருக்கும் ஒரு பெண் என்பது பெருமைப்படக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேதா ராஜ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். ஜார்ஜியா பல்கலை.,யில் சர்வதேச அரசியல் துறையில் பட்டம் பெற்ற இவர், ஸ்டான்போர்டு பல்கலை.,யில், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார்.

ஜோ பிடன் டிஜிட்டல் பிரசார கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் 130 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஒரு நிமிடம் கூட வீணக்காமல் பிரசார வேலைகளில் ஈடுபடவுள்ளாதாகவும் கூறுகிறார் மேதா ராஜ்.