அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு- அதிபர் ட்ரம்ப்

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் 29 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,38,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

trump

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசிலை விட நாங்கள்தான் அதிகமான கொரோனா பரிசோதனை நடத்துகிறோம். நாங்கள் இதுவரை 5 கோடியே 50 லட்சம் பரிசோதனை செய்துள்ளோம். அமெரிக்காவில் மிகக் குறைவான இறப்பு விகிதத்தையே கொண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம். கொரோனாவுக்கு மிக சிறப்பான சிகிச்சை முறைகளையே வழங்கிவருகிறோம். விரைவில் நல்ல செய்தி வெளிவரும் என நம்புகிறேன். கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம்” எனக்கூறினார்.