அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

Covid-19 vaccine

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

pfizer vaccine

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை அனுமதி அளித்தது.

இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 17 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டனர். 6 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். திட்டமிட்டதைவிட பைடன் தலைமையிலான அரசு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகை மருத்துவர் சைரஸ் ஷாப்பர் தெரிவித்துள்ளார்.