ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கொண்டாடும் அமெரிக்க இந்தியர்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாட அங்குள்ள இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, ஆகஸ்ட் 5ம் தேதி நடத்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டும் நிலையில், அன்றைய தினம் அமெரிக்காவில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பெரிய டிஜிட்டல் திரையில் ராமரின் உருவப்படங்கள் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த கொண்டாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள
அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொது விவகார குழுவின் தலைவரான ஜெகதீஷ் செஹானி, இந்த நிகழ்விற்காக மாபெரும் நாஸ்டாக் மற்றும் 17 சதுர அடிக்கு பிரமாண்ட எல்.இ.டி டிஸ்பிளே திரைகள் குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும், நாளை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற சொற்களுடன் கூடிய ராமரின் உருவப்படங்கள் விளம்பர பலகையில் திரையிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்கா சார்ந்த நிறுவனங்கள் வாங்கவில்லையெனில் டிக் டாக்கிற்கு தடை- ட்ரம்ப்