ஹெச்1பி விசா: அதிபர் ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் ஹெச்1பி, ஹெச்2பி விசா அளிப்பதை நிறுத்தி வைத்து அதிபா் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்த நாட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது. இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது.

குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டே கால் லட்சம் பேர் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு குலுக்கல் முறையில் விசா வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹெ1பி விசாக்களை வழங்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு வைத்துள்ளது.

இப்படி விசா பெறுபவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1.84 லட்சம் இந்தியர்கள் ஹெச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஹெச்1பி விசா வழங்குவதற்கு இந்த ஆண்டு இறுதிவரை அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆணை பிறப்பித்தது.

இதற்கு எதிராக கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அங்கமாக உள்ள தொழிலக கூட்டமைப்புகள் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம், அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்தது.

குடியேற்ற விதிகளை வகுக்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அதிபா் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவில் வறுமையில் வாடும் இந்தியர்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter