தகவல்களை திருடுவதாக தொழில்நுட்ப நிறுவனங்களிடம் அமெரிக்க எம்.பிக்கள் சரமாரி கேள்வி!

சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களை வளர விடாமல் கட்டுப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுத்துள்ளன. கூகுளின் சுந்தர் பிச்சை, ஃபேஸ் புக்கின் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட முன்னணி நிறுவன சி.இ.ஓக்களிடம் அமெரிக்காவின் எம்.பிக்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஒரு துறையில் குறிப்பிடதக்க எதிர் போட்டியாளர் இல்லாமல் தனிப்பட்ட ராஜாங்கம் அமைத்து கோலோச்சி வரும் நிறுவனங்கள் MONOPOLY என்று அழைக்கப்படுகின்றன. கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களின் சில சேவைகள் மோனோபாலியாக உள்ளன. அவ்வாறு மோனோபாலியாக இருந்து கொண்டு, சிறிய நிறுவனங்களை வளர விடாமல் கட்டுப்படுத்துவதாக அமேசான், கூகுள், ஃபேஸ் புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றது.

Sundar Pichai

ஆன்லைனில் நடைபெற்ற இந்த விசாரணையில் அமெரிக்க எம்பிக்கள் சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர். கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ALPHABET- இன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்று, பல்வேறு வினாக்களுக்கு விடையளித்தார். குறிப்பாக, கூகுள் தகவல்களை திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த சுந்தர் பிச்சை, மேலான நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுவதாக தெரிவித்தார்.

நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜோ பிடனை வெற்றி பெற செய்ய கூகுள் முயல்வதாக குடியரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு, இரு தரப்பு பிரசாரங்களிலும் நடுநிலையாக செயலாற்றுவதாக விளக்கமளித்தார். ஃபேஸ் புக் நிறுவனத்தின் மார்க் ஸக்கர்பெர்க்கிடம் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதற்குப் பதிலளித்த அவர், இன்ஸ்டாகிராம் வாங்கப்பட்ட போது அது மிக சிறிய அளவிலான செயலியாகவே இருந்ததாகவும், அப்போது ஃபேஸ் புக்கிற்கு போட்டியாளராக இன்ஸ்டாகிராம் இல்லை எனவும் கூறினார், மேலும், அமெரிக்காவின் வர்த்தக கமிஷனின் அனுமதியுடன் தான் இன்ஸ்டாகிராமை வாங்கியதாகவும் அவர் விளக்கமளித்தார். மற்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப வசதிகளை FACEBOOK COPY அடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு, சில வசதிகளை தழுவியுள்ளதாக ஸக்கர்பெர்க் பதிலளித்தார்.

Mark Zuckerberg

மூன்றாம் நிலை விற்பனையாளர்களின் தரவுகளை பயன்படுத்தி விற்பனை முடிவுகளை எடுப்பதாக அமேசான் மீது வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெஜாஸ், அது போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்கிடம் குறைவான கேள்விகளே கேட்கப்பட்ட நிலையில், ஆப் ஸ்டோர் தொடர்பான சர்ச்சை வினாக்களை சாமார்த்தியமாக கையாண்டார். இந்த நான்கு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை விசாரணை கமிட்டி விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்தால், மற்ற நாடுகளுக்கும் வழங்குவோம்- அதிபர் ட்ரம்ப்