முக்கிய பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த பைடன்!

Arun Venkataraman

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்றார். அதிபராகி, 45 நாட்களில் 55 உயர் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமித்து அழகு பார்த்தார்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பைடனின் நிர்வாக குழுக்களில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோலோச்சி உள்ளனர்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.

அமெரிக்க சுகாதார துறையில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபரின் மனைவி ஜில் பைடனின் கொள்கைக் குழு இயக்குநர் மாலா அஹிடா உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு பொருளாதார விவகார துறையில் ஆலோசகராக உள்ள இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அருண் வெங்கட்ராமனை, வெளிநாட்டு வர்த்தக சேவையின் தலைமை இயக்குனர் மற்றும் வர்த்தகத்துறையில் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளர் பதவிக்கு நியமிக்க ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச வர்த்தக நிறுவனங்கள், அமெரிக்க அரசுக்கு ஆலோசனைகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கிய இவர், விசா என்ற அமைப்பில் மூத்த இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத்துக்கான அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி ஜேனி ஏ ரெஸ்டானியின் சட்ட எழுத்தாளராக பணியாற்றியவர் அருண், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திலும் வேலை செய்த அனுபவம் வாய்ந்தவர்.