அதிபர் ட்ரம்ப் vs ஜோ பிடன்! காரசாரமான குற்றச்சாட்டுகள்!

trump vs joe biden

ட்ரம்பின் நிர்வாகமின்மையால் அமெரிக்கா இருளில் மூழ்கி இருப்பதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பே மீண்டும் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜோ பிடனை அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கட்சிமாநாடு நடைபெற்றது. இருவரையும் முன்மொழிந்து பல்வேறு தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றினர். மாநாட்டின் இறுதியாக ஜோ பிடன் ஏற்புரையாற்றினார். ட்ரம்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா இருளில் மூழ்கிவிட்டதாக சாடிய ஜோ பிடன், தனக்கு வாய்ப்பளித்தால் அமெரிக்காவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சிறந்த நிர்வாகத்தை தருவேன் என உறுதி அளித்தார்.

பொறுப்புகளை தட்டி கழிக்கும் அதிபராக ட்ரம்ப் இருக்கிறார் என விமர்சித்த ஜோ பிடன், வெறுப்புணர்வையும் பிரிவினையையும் தூண்டிவிட்டு அமெரிக்கா மீதான மதிப்பையே குறைத்துவிட்டார் என கூறியுள்ளார். அமெரிக்கர்கள் தங்களின் வாழ்வை மாற்றக் கூடிய தேர்தலாக இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ள ஜோ பிடன் கொரோனா பெருந்தொற்றில் இருந்தும், பொருளாதார இழப்பில் இருந்தும் நாட்டை காப்பாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அதிபர் ட்ரம்ப், ஜோ பிடனை அதிபராக தேர்வு செய்தால் அது உங்களின் துர்கனவாக முடியும் என கூறியுள்ளார். பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ட்ரம்ப், தொழிலாளர்களுக்கு எதிரானவர் ஜோ பிடன் என சாடினார்.