தேர்தலுக்கு முன்னரே இந்திய வம்சாவளியினருக்கு நன்றி தெரிவிக்கும் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ட்ரம்ப் வெற்றிப்பெருவதற்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்கு மிக மிக முக்கியம் என சொல்லப்படுகிறது. இதற்காக ‘ட்ரம்ப் விக்டரி இந்தியன்-அமெரிக்கன் பைனான்ஸ் கமிட்டி’யின் துணை தலைவர் அல் மேசன், ட்ரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினரை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அல் மேசன் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்தியா வம்சாவளியினர் ஆதரவளிக்கவிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிரச்சாரத்தின் போது லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் ட்ரம்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர் என வெள்ளை மாளிகை பத்திரிகை துணை செயலாளர் சாரா மேத்யூஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக மிச்சிகன், புளோரிடா, டெக்சாஸ், பென்சில்வேனியா, வெர்ஜினியா போன்ற மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளியினர் ட்ரம்புக்கு ஆதரவு அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ட்ரம்ப் தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் ட்ரம்ப் நெருக்கமாக இருப்பதற்கும், இந்திய பயணத்துக்கும் கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் மட்டுமில்லாது அவரது மனைவி மெலினா, மகள் இவாங்கா மற்றும் மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் இந்தியா மற்றும் இந்தியர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளதாக அல் மேசன் தெரிவித்துள்ளார்.