அமெரிக்காவில் ஒரே நாளில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா! அதிரவைக்கும் பாதிப்பு நிலவரம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 66 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் 29 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது.

covid 19

கொரோனாவின் முதல் அலையில் இருந்தே அமெரிக்கா இன்னும் மீண்டு வரவில்லை என்கின்றனர் நிபுணர்கள். நிலைமை இப்படியே நீடித்தால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிப்பு என்ற உச்சமும் எட்டப்படலாம் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன. விரைவாக பொதுமுடக்கத்தை தளர்த்தியது தான் இத்தனை வேகமாக வைரஸ் பரவ காரணம் என சொல்லப்படுகிறது. எனவே பல்வேறு மாகாணங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் அமெரிக்காவில் 33 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கை அளித்துள்ளனர்.