கொரோனா தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்தால், மற்ற நாடுகளுக்கும் வழங்குவோம்- அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு முதலில் வழங்க வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சீனா தடுப்பூசி கண்டுபிடித்தால் அந்த தடுப்பூசிக்காக அந்நாட்டுடன் இணைந்து செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

trump

இந்நிலையில் அமெரிக்கா முதலில் கொரோனா தடுப்பூசி தயாரித்தால் மற்ற நாடுகளுக்கும் வழங்குவோம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பொருட்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்குவதுபோல் தடுப்பூசியையும் வழங்கும் எனக்கூறிய அவர், அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா உருவாக்கிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தொடங்கியிருப்பதாகவும், இந்த சோதனையில் 10,000 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமெரிக்க தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 44 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: ட்ரம்ப் VS ஜோபிடன்! விவாதம் எப்போது?