விசா ரத்து! வெளியேற்றப்படும் மாணவர்கள்! கேள்விக்குறியாகும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம்??

கொரோனா பரவல் எதிரொலியால் அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் முடிவெடுத்திருப்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு குடியுரிமை ஆணையம் அறிவித்துள்ளது.

அமெரிக்கர்களின் வேலை அந்நாட்டு குடிமக்களுக்கே என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துவருபவர் அதிபர் ட்ரம்ப். தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள்.

Students
அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளான. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச்சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து மாணவர்கள் தப்பிக்க வேண்டுமென்றால் மாணவர்கள் குறிப்பிட்ட கல்லூரிகளிலிருந்து முறைப்படி மாறுதல் பெற்றுக்கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 2018-19 கல்வியாண்டில் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்றதாக சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செமஸ்டரில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியான வகுப்புகளில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எஃப் ஒன் மற்றும் எம்- ஒன் வகை விசாக்கள் மூலமாக ஆன்லைன் வழியாக பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, வகுப்புகளை ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்த முடிவெடுத்துள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.