ஜோ பிடனின் ஆழமான அரசியல் அனுபவம்! வசப்படுமா அதிபர் பதவி?

joe biden

அமெரிக்கா அதிபராக வேண்டும் என்ற கனவுடன் 1980களில் இருந்து முயற்சிக்கும் ஜோ பிடனுக்கு மூன்றாவது முறை தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த முறை அதிபர் பதவியை தன்வசப்படுத்துவாரா? என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜோ பிடன் ஒரு மிடில் கிளஸ் குடும்பத்தை சேர்ந்தவர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். 1972ஆம் ஆண்டு முதன்முறையாக செனட் உறுப்பினராக டெல்அவேர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுநாள் வரை 6 முறை இதே பகுதியில் இருந்து செனட் உறுப்பினராகியுள்ளார். அமெரிக்கா அதிபராக வேண்டும் என்ற ஜோ பைடனின் கனவு பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. 1988ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து களத்தில் இறங்கி பின்னர் அதிலிருந்து விலகினார். மீண்டும் 2008ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் போட்டி களத்தில் இறங்கிய ஜோ பிடன் ஒபாமாவுக்காக வாய்ப்பை விட்டு கொடுத்து துணை அதிபர் வேட்பாளரானார். அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த போது , ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டம், தொழிற்சாலை சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்காற்றியவர்.

அமெரிக்கா இதுவரை பெற்ற துணை அதிபர்களிலே சிறந்தவர் ஜோ பிடன் என ஒபாமா பலமுறை இவரை புகழ்ந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இழப்புகளை சந்தித்தவர் ஜோ பிடன். 1972இல் முதன்முறையாக செனட் உறுப்பினராக தேர்வான உடனே சாலை விபத்தில் மனைவியை இழந்தார். தனது குழந்தைகள்சிகிச்சை பெறும் அறையில் இருந்து தான் செனட் உறுப்பினராக பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் மூளை புற்றுநோய்க்கு தனது மகனை இழந்தார். பொதுவாழ்க்கையில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் தலைவராக அறியபடுகிறார் ஜோ பிடன்.. தன்பாலின சேர்க்கை திருமணங்களுக்கு வெளிப்படையாக தனது ஆதரவினை தெரிவித்தவர். கிட்டதட்ட 50 ஆண்டுகால அரசியல் அனுபவம், துணை அதிபராக பதவி வகித்தது உள்ளிட்டவற்றை கொண்டு இவர் சிறந்த நிர்வாகியாக இருப்பார் என கட்சியினர் முன்னிலைப்படுத்துகின்றனர். அமெரிக்கா அதிபராக தேர்வானால், அந்த பதவியை ஏற்க போகும் மிக வயதான நபராக ஜோ பிடன் இருப்பார்.