கொரோனா… கோடீஸ்வரர் பில் கேட்ஸை கிண்டலடித்த எலான் மஸ்க்!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கிண்டலாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அளவுக்கு அதிகமாக பெரிது படுத்தப்படுவதாகவும், கொரோனாவோடு தொடர்புபடுத்தப்படும் பல்வேறு மரணங்கள் வெவ்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் கூறியிருந்தார். தனது கருத்துகளை எப்போதும் வெளிப்படையாக தெரிவிக்கும் குணமுடைய மஸ்க், பொது முடக்கங்கள் தேவையற்றவை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பில் கேட்ஸ், எலான் மஸ்க் தனக்கு தெரிந்த மின்சார கார் மற்றும் ராக்கெட் தயாரிப்பு பற்றி மட்டும் கருத்து தெரிவிப்பது நல்லது எனக் கூறியிருந்தார். மஸ்க்கிற்கு தடுப்பு மருத்து தயாரிப்பில் தொடர்பில்லை என்பதால் தனக்கு தொடர்பில்லாத விஷயங்களை அவர் பேசிக் குழப்பாமல் இருக்கவேண்டும் என கேட்ஸ் குறிப்பிட்டார்.

இதனால் எரிச்சலடைந்த மஸ்க், தனது டிவிட்டர் பக்கத்தில் பில் கேட்ஸ் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். தனக்கு எது தெரியும், தெரியாது என்பது பில் கேட்ஸுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் மஸ்க் பதிவிட்டுள்ளார். தானும், பில்கேட்ஸும் காதலர்கள் என்கிற வதந்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அவர் கேலியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்ததுடன், நகைச்சுவையாக பதில் பதிவுகளையும் இட்டுள்ளனர். ஏற்கனவே பில் கேட்ஸ் தனது நிறுவன மின்சார காரை வாங்காமல் போர்ஸே நிறுவன காரை வாங்கிய போதும் அதை எலான் மஸ்க் விமர்சித்திருந்தார்.