அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் இளைஞர்கள்!

voting

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையை பயன்படுத்தி தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவு இம்முறை முன்கூட்டியே வாக்களிக்கும் முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்கா அரசமைப்பு சட்டப்படி , 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்கிழமையில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. எனினும் முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் தேர்தல் நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.

தபால் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்றோ அமெரிக்கர்கள் முன்கூட்டியே தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற முடியும்.

கடந்த சில ஆண்டுகளாகவே முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று அச்சம் நீடிப்பதால் இதுவரை இல்லாத அளவு அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 23ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் 5 கோடியே 30 லட்சம் பேர் இப்போதே தங்களின் வாக்கினை பதிவு செய்துவிட்டனர்.

US presidential elections

அதிகபட்சமாக டெக்சாஸ் மாகாணத்தில் 60 லட்சம் பேரும், கலிஃபோர்னியாவில் 50 லட்சம் பேரும் முன்கூட்டியே ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பே , ஃபுளோரிடா உள்ள வாக்கு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டார். இளம் வயதினரே அதிக எண்ணிக்கையில் வாக்கினை பதிவு செய்வது தெரியவந்துள்ளது.18 முதல் 29 வயதுக்கு உட்பட்ட, 30 லட்சம் இளைஞர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தியுள்ளனர்.

கருப்பினத்தவர்களும் அதிகளவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவானவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

தபால் வாக்குகள் அதிகளவில் பதிவாவதால் அது தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்கூட்டியே வாக்களிக்கும் முறைக்கு வரவேற்பு இருப்பதால் இம்முறை அமெரிக்கா அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு வாக்குப்பதிவு இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்கலாமே:  ட்ரம்ப் எதுக்கு தேர்தலில் நிற்கிறார் தெரியுமா? ஒபாமா பதில்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter