கொரோனாவால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலையில் ரூ.15 லட்சம் கோடி சொத்து சேர்த்த அமெரிக்கர்!

Jeff Bezos

கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்து உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், ஒருவரை மட்டும் யாரும் எட்ட முடியாத உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரின் சொத்து மதிப்பு 15 லட்சம் கோடி என்ற உயரத்தை எட்டியுள்ளது.

ஜெஃப் பெசோஸ் உலகமே இவரை பற்றி தான் வியப்புடன் பேசி வருகிறது. ஆம், உலகிலேயே 200 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து சேர்த்த முதல் நபர் இவர் தான்.. அதாவது ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 15 லட்சம் கோடி ரூபாய்.. உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் பில்கேட்ஸை விட ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் அதிகம்… கடந்த ஜனவரி மாதம் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 115 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து இந்த 8 மாதங்களில் 204 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக உச்சமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் அத்தியாவசிய பொருட்களை கூட ஆன்லைனில் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிக லாபம் அடைந்திருக்கிறது அமேசான் நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரண்டரை லட்சமாக உயர்வு கண்டுள்ளது.

Jeff Bezos

இது தான் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது. அமேசான் நிறுவனம் தவிர விண்வெளி துறையில் இருக்கும் BLUE ORIGIN நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மற்றும் சில தனியார் நிறுவனங்களில்முதலீடுகள் என பல வகைகளில் பெசோஸுக்கு வருவாய் கிடைக்கிறது. எனினும் அமேசான் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் 11 சதவிகித பங்கு மதிப்புகள் தான் ஜெஃப் பெசோஸ் இந்த உயரத்தை எட்ட காரணமாக அமைந்துள்ளது. ஒரு வேளை ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் மனைவிக்கு விவாகரத்து தந்து 38 பில்லியன் அமெரிக்கா டாலர்களை வழங்காமல் இருந்திருந்தால் அவரது சொத்துமதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்..