தொடரும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி… 9 ஆவது வாரமாக சரிவு!!

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 55 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

us dollar

பிற நாட்டு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஒன்பதாவது வாரமாக குறைந்துள்ளது. உலக நாணய சந்தையில் அமெரிக்க டாலர் இவ்வளவு நீடித்த காலம் தொடர் வீழ்ச்சி காண்பது கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதன் முறையாகும். கொரோனா பாதிப்புகள் எதிரொலியாக அமெரிக்க பொருளாதாரம் கண்டு வரும் வீழ்ச்சியே அதன் நாணய மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் வேலை இழப்பு புள்ளி விவரங்கள் கவலை தரும் வகையில் அதிகரித்துள்ளது டாலரை பலவீனப்படுத்தியுள்ளது. டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் அதே நேரம் சீனாவின் யுவான் மதிப்பு அதிகரித்து வழிகிறது. கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை சீன நாணயமான யுவான் எட்டியுள்ளது. ஐரோப்பிய நாணயமான யூரோ மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சுமார் 75 ரூபாய் என்ற அளவில் இருந்து வருகிறது