ட்ரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்?

Trump

பதவி நீக்க தீர்மானம் விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக விசாரணையை தொடங்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2017, ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக அரியணை ஏறினார் மிகப்பெரிய தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்..

நான்காண்டு காலம் அமெரிக்கா அதிபராக பல சர்ச்சைகளையும் சவால்களையும் எதிர்கொண்டார். தொழிலதிபராக வெற்றி கண்ட ட்ரம்பால் மக்கள் பிரதிநிதியாக சரிவர இயங்கமுடியவில்லை.

சர்வதேச அரசியலை கையாண்ட விதம் கொரோனா தொற்றை எதிர்கொண்ட போக்கு இவை எல்லாம் ட்ரம்புக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கை குறைத்து விட்டது.

விளைவு தேர்தலில் ஏற்பட்ட தோல்வி. ஆனால் இதுவரை தான் தோல்வி அடைந்ததை ட்ரம்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

trump

அது தவிர ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் அவர் மீது மேலும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாலே வன்முறை வெடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் இரண்டாவது முறையாக பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதிபர் என்ற அவப்பெயருக்கு ட்ரம்ப் ஆளாகிவிட்டார்.

இந்நிலையில் ட்ரம்புக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பிரந்திநிதிகள் சபையில் பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையிலும் விசாரணையை மேற்கொள்ள ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை முன்னெடுக்க 56 உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 44 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பேச்சுரிமைக்கும் அரசியலைப்புக்கும் எதிரானது என ட்ரம்பின் வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்ட் சபை ட்ரம்பின் பதவிநீக்க தீர்மானத்தை கையில் எடுத்துள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் இனி அவரது வாழ்நாளிலேயே அமெரிக்க தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.