அமெரிக்க தேர்தல் முறையாக நடத்தாவிட்டால்… நான் இதனை செய்துவிடுவேன்! மிரட்டும் ட்ரம்ப்!

அமெரிக்காவை முறையாக நடத்தாவிட்டால் சீனாவுடனான வணிக தொடர்பை துண்டித்துவிடுவேன் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலானரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேர்தல் பரப்புரையை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் ட்ரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் வில்லியம் இவானினா எச்சரித்திருந்தார்.

ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் நீடிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே வணிக உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையே தடைபட்டுள்ளது. இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவை முறையாக நடத்தாவிட்டால் சீனாவுடன் வணிக தொடர்பு கிடையாது என எச்சரித்துள்ளார்.