மனைவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் – பைடன்

அதிபரான உடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடன் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிபராக தொடங்கியுள்ள தமது அடுத்த பயணத்தில், மனைவிக்கு நன்றியுள்ளவனாக இருக்கப் போவதாக பைடன் ட்வீட் செய்துள்ளார். மேலும், அமெரிக்காவின் அதிபராக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதல் ட்விட்டர் பதிவையும் தொடங்கியுள்ளார்.

அதில், நாட்டின் அதிபராக இப்போதுதான் நிஜமான பணிகள் தொடங்குகிறது என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

நாடு நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலையில் வீணடிக்க நேரமில்லை என்றும், அமெரிக்க குடும்பங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிட ஓவல் அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கியுள்ளதாக அதிபருக்கான ட்விட்டரில் பைடன் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இது என்று ட்வீட் செய்துள்ள அவர், அதே தலைப்பில் சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் வெள்ளை மாளிகை வந்தார்.

President-elect Joe Biden speaks at an event on November 01, 2020 in Philadelphia. | Photographer: Drew Angerer | Getty Images North America via Bloomberg

வெள்ளை மாளிகைக்கு சிறிது தூரம் முன்பாகவே வாகனத்திலிருந்து இறங்கிய அவர், இல்லத்தரசியின் கரத்தைப் பற்றியபடியே சாலையில் நடந்து வந்தார்.

சாலையோரம் திரண்டிருந்தவர்களின் வாழ்த்துக்களை ஏற்றபடியே நடந்த அவர், வெள்ளை மாளிகையில் அதிபராக முதல்முறையாக கால் பதித்தார்.

பின்னர் அதிபரின் அலுவலகத்தில் அலுவல்களைத் தொடங்கிய ஜோ பைடன், கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அவற்றில் முக்கியமாக, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய இசைவு தெரிவித்து, பைடன் கையொப்பமிட்டார்.

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளுக்கு இணைந்து செயல்பட, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் ஆண்டு, 196 நாடுகள் கையெழுத்திட்டன.

அப்போதைய அதிபர் ஒபாமா கையொப்பமிட்டிருந்த இந்த ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகுவதாக அதன் பின்னர் அதிபரான ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.