டிக்டாக், விசாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை!

சீனாவின் டிக் டாக் மற்றும் வி சாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் நாளை முதல் இச்செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியாது.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேர வீடியோ மூலம், திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக், அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் திருடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை 90 நாட்களுக்குள் விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிற்கு அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

அமெரிக்காவில் டிக்டாக்கின் சந்தை மதிப்பு பல மில்லியன் டாலர் என்பதால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கான போட்டியில் களமிறங்கின.

இந்த போட்டியில் முன்னணியில் இருந்தது மைக்ரோசாப்ட். ஆனால், மைக்ரோசாப்டை கைவிட்ட பைட் டான்ஸ், ஆரக்கிளிடம் ஒப்பந்தம் செய்தது.

பெரும்பான்மையான பங்குகள் பைட் டான்ஸ் வசம் இருக்கும் என்றும், அதன் தலைமையகம் மட்டும் அமெரிக்காவில் இருக்கும் என்ற ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ஏற்கவில்லை.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் மற்றும் வி சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் சீனாவின் தீய நோக்கத்தை தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த இரு செயலிகளையும் அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விசாட் செயலியை பயன்படுத்துவதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

அதேநேரத்தில் டிக்டாக் செயலியை நவம்பர் 12 ஆம் தேதி பயன்படுத்தலாம் என்றும், ஆனால், புதிதாக எவ்வித Update-ம் செய்ய முடியாது என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த தடையை ஏற்க முடியாது என கூறியுள்ள இரு சீன நிறுவனங்கள், தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளன.

அதிபர் ட்ரம்பின் தடை நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் புகார் அளித்துள்ளது. இந்த தடை நடவடிக்கை வருவாய் இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறி, வாஷிங்ட்ன் பெட்ரல் நீதிமன்றத்தில் டிக்டாக்கும், பைட் டான்ஸ் நிறுவனமும் புகார் மனு அளித்துள்ளன.

இதையும் படிக்கலாமே: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் இந்தியரே?

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa