அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிப்பு! பாதிப்பு விகிதம் குறைவு

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 47 லட்சத்து 95 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 729 பேர் உயிரிழந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் 29 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஃபுளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளே பெருமளவில் வைரஸ் பரவ காரணமாக சொல்லப்படுகிறது.

us corona

கொரோனா பரவலை தடுக்க ட்ரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ராய்ட்டர்ஸ் மாநில மற்றும் மாவட்ட அறிக்கைகளின் படி, கடந்த வாரம் பதிவான புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 5 சதவீதம் குறைந்திருப்பதும், இறப்பு விகிதம் 36 சதவீதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஓக்லஹோமா, மிசோரி உள்ளிட்ட 20 மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்தாலும், ட்ரம்ப் தலைமையிலான அரசு பொதுமுடக்கத்தை தளர்த்துவது, தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்கா சார்ந்த நிறுவனங்கள் வாங்கவில்லையெனில் டிக் டாக்கிற்கு தடை- ட்ரம்ப்