கொரோனா எதிரொலி: 10 அமெரிக்கர்களில் ஒருவர் பழைய வேலைக்கு அழைக்க வாய்ப்பில்லை

கொரோனா தொற்றால் வேலையிழந்த 10 அமெரிக்கர்களில் ஒருவர் பழைய வேலைக்கு அழைக்கப்பட வாய்ப்பில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று மற்றும் பொதுமுடக்கத்தால் அமெரிக்காவில் 11 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

அவர்களில் 7.2 சதவீதம் பணியாளர்கள் பழைய வேலைகளுக்கு திரும்ப வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 3.5 சதவீதம் பணியாளர்கள் மீண்டும் அந்த வேலைக்கு அழைக்கப்படுவோம் என எதிர்பார்க்கின்றனர் ஆனால் அதை உறுதியாக நம்ப முடியாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிவித்துள்ளனர். வேலைகளுக்குத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பவர்களில் பலர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவர் என ஈபிஐயின் மூத்த பொருளாதார நிபுணரும் கொள்கை இயக்குநருமான ஹெய்டி ஷியர்ஹோல்ஸ் தெரிவித்துள்ளார்.