கைக்கொடுக்கும் கனடா! அமெரிக்காவிற்கு ‘குட் பை’ சொல்லும் இந்தியர்கள்!!

அமெரிக்கர்களின் வேலை அந்நாட்டு குடிமக்களுக்கே என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துவருபவர் அதிபர் ட்ரம்ப். தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருக்கும் இந்தியர்கள் பலர் கனடாவில் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் அவர்களில் பலருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைக்கு விண்ணப்பத்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு கனடா அரசு விசாவையும் வழங்கியுள்ளது. அமெரிக்கா எங்களை கை விட்டாலும் பரவாயில்லை கரம் கொடுக்க கனடா இருக்கிறது என இந்திய தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து கனடா 74,000 பேருக்கு புதிதாக நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான குடியுரிமை அங்கீகாரத்தை கொடுத்துள்ளது, அவர்களில் 24% இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றிய சுமார் 70 % இந்திய பொறியாளர்கள் கனடாவிகு செல்லவுள்ளதாக ஸ்டேக்ராஃப்டின் இணை நிறுவனர் வர்திகா மனஸ்வி தெரிவித்துள்ளார். ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் 60 நாட்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.