டிக்டாக் நிறுவனத்தை வாங்குகிறதா மைக்ரோ சாப்ட்?

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், சீனாவின் டிக்டாக் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க பைட் டான்ஸ் நிறுவனத்தை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. Tiktok

இதையடுத்து டிக்டாக் நிறுவனத்தை சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் மைக்ரோசாப்ட், பைட் டான்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலை மைக்ரோ சாப்ட் நிறுவனமும், டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனமும் மறுத்துள்ளது. டிக் டாக் குறித்து வரும் செய்திகள், அனுமானங்கள், புரளிகள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், எங்களுடைய நிறுவனத்தை நாங்கள் வெற்றிகரமாக நடத்துவோம் என்றும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கி அந்த செயலியின் பெயரை டிக்டாக் என மாற்றியது. தற்போது டிக்டாக்கிற்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதற்கிடையில் அமெரிக்காவில் டிக்டாக் ஆப் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார்.

இதையும் படிக்கலாமே:பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!