ஹெச் 1பி விசா பழைய குலுக்கல் நடைமுறை நீட்டிப்பு

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிவரை ஹெச்1 பி விசா வழங்குவதில் குலுக்கல் முறையே தொடங்கும் என பைடன் அரசு தெரிவித்துள்ளது.

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது.

இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.

அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் இரண்டே கால் லட்சம் பேர் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு குலுக்கல் முறையில் விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த விசாவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். இதனால் தகுதியானவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்.

இதனிடையே கொரோனா காரணமாக, இந்த விசா வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வரும், மார்ச், 3ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.

மேலும் குலுக்கல் முறையில், ஹெச் 1பி விசா வழங்குவதற்கு பதிலாக, வல்லுனர்களின் தகுதி, உள்நாட்டினருக்கு நிகரான ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில், விசா வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹெச் 1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என பைடன் அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஹெச்1 பி விசா வழங்குவதற்கான தடையையும் பைடன் நீக்கியுள்ளார்.