இந்தியர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த பைடன்!

Joe Biden

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதனால் ட்ரம்ப் வெளிநாட்டினருக்கு எதிரியாகவே கருதப்பட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக, பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தேர்தலில் தான் உறுதியளித்தபடி அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இத்தனை பணியாளர்கள் மட்டுமே அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அதேபோல் வேலை அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பயனடைவர் என சொல்லப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேல் கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.

ஹெச் 1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகளுக்கும், வேலை வாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 42 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீன் கார்டு இல்லாமல் இருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின், அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டத்தையடுத்து சட்டமாக்கப்பட உள்ளது.