கொரோனா எதிரொலி: கேமராவுக்கு பெயர் பெற்ற கோடக் நிறுவனம் மருந்து நிறுவனமாகிறது!

கொரோனா எதிரொலியால் கேமராக்களுக்கும், புகைப்படச் சுருள்களுக்கும் புகழ்பெற்ற கோடக் நிறுவனம் மருந்து நிறுவனமாக மாற்றப்படவுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

drug

இந்நிலையில் புகைப்படக்கருவி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் கோடாக் நிறுவனத்தை மருந்து நிறுவனமாக மாற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்பு உறுதிச் சட்டத்தினைப் பயன்படுத்தி இதற்கான இசைவு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்க மருந்துத் தொழில்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில், பாதுகாப்பு உறுதிச் சட்டத்தினை பயன்படுத்தி கோடக் மருந்து உற்பத்தி நிறுவனத்தை நிறுவிட 765 மில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

கேமராக்களுக்கும், புகைப்படச் சுருள்களுக்கும் புகழ்பெற்ற கோடக் நிறுவனத்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட துறையாக இருக்கும் என்று குறிப்பிட்ட, கோடக் மருந்து நிறுவனத்தில் பணியாற்ற உலக அளவில் தலைசிறந்த ஆட்களை அழைத்துவர இருப்பதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம், மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: தகவல்களை திருடுவதாக தொழில்நுட்ப நிறுவனங்களிடம் அமெரிக்க எம்.பிக்கள் சரமாரி கேள்வி!