பைடனுக்கு கடிதம் எழுதிவைத்து சென்ற ட்ரம்ப்!

trump letter

அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பைடனுக்கு ட்ரம்ப் ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துவிட்டு சென்றது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா அரசியலமைப்பும் ஆட்சி மாற்ற நடைமுறைகளையும் பல பாரம்பரிய பழக்கவழக்கங்களை கொண்டது. அதன்படி ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரீஸ் துணை அதிபராகவும் பதவியேற்று கொண்டதை உலகமே நேரலையில் கண்டது.

அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் அதிபர் ஜோ பைடனின் தொடக்க உரை அமைந்திருந்தது.

அதில் நாங்கள் என்ற அர்த்தம் கொண்ட WE எனும் வார்த்தையை பைடன் 79 முறை பயன்படுத்தி இருக்கிறார்.

இதில் மற்றொரு சுவாரஸ்யம், பைடனின் உரையை தயாரித்த குழுவின் தலைவர் இந்தியாவை சேர்ந்தவர்.

தெலங்கானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட வினய் ரெட்டி என்பவரே தொடக்க உரையை தயாரித்த குழுவின் தலைவர்.

கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் இந்த முறை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

Joe Biden's Inauguration Was a Blast From the Past, But Specifically the  1990s | Vanity Fair

இது தவிர பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் ஊதா நிற ஆடை அணிந்திருந்தது உலக அளவில் கவனம் ஈர்த்தது.

துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட அனைவரும் ஊதா நிற உடையில் காட்சியளித்தனர்.

பெண்கள் வாக்குரிமையை குறிக்கும் விதமாக இவர்கள் ஊதா நிற ஆடை அணிந்துவந்தனர்.

பதவியேற்ற பின் வெள்ளை மாளிகை சென்ற ஜோ பைடனுக்கு ட்ரம்ப் விட்டு சென்ற கடிதம் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது.

பதவிக்காலம் முடிந்து செல்லும் அதிபர் , அந்த பதவியின் தனித்துவம் குறித்து கடிதம் எழுதிவைத்து செல்வது வழக்கம்.

1989ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் முதன்முறையாக கடித பரிமாற்றத்தை தொடங்கிவைத்தார்.

பின்னாளில் வந்த அதிபர்களும் அந்த வழக்கத்தை தொடர்கின்றனர். அதன்படி ட்ரம்ப் எழுதிவைத்த கடிதம் ஓவல் அலுவலகத்தில் இருந்து பைடனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை பைடன் இதுவரை வெளியிடவில்லை. 2017ஆம் ஆண்டு ட்ரம்புக்கு ஒபாமா எழுதிய கடிதத்தில் இது ஒரு தனித்துவமான அலுவலகம் என கூறி இருந்தார்.

முன்னதாக புஷ், ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் வாழ்வின் மிகச்சிறந்த அத்தியாயம் தொடங்கி இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ட்ரம்ப் என்ன எழுதி இருக்கிறார் என்பதை அறிய ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

ட்ரம்ப் கனிவான கடிதத்தை எழுதி இருப்பதாக கூறியுள்ள பைடன், விரைவில் அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை ட்ரம்புடன் பேசிய பிறகு வெளியிடுவதாக கூறியுள்ளார்.