கொரோனாவால் வேலை இழந்து தவித்த ஆசிரியர், உதவிக்கரம் நீட்டிய மாணவர்கள்!

teacher- students

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்து தவித்துவந்த ஆசிரியருக்கு அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் பான்டானா பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது வீட்டருகே முதியவர் ஒருவர் காரில் வாழ்க்கை நடத்திவந்தார்.

நீண்ட நாட்களாகவே அவரை கவனித்துவந்த ஸ்டீபன், அந்த முதியவர் தனது ஆசிரியர் ஜோஸ் (77) என்பதை கண்டுபிடித்தார். உடனடியாக அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது ஜோஸ்க்கு கொரோனாவால் வேலை இல்லாமல் போனது தெரியவந்தது. இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் காரில் வாழ்ந்துவந்தது தெரியவந்தது.

இதனையறிந்த ஸ்டீபன், அவருக்கு ரூ.22,000 கொடுத்து ஒரு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்தார்.

அதுமட்டுமின்றி, சமூக வலைதளம் மூலம் ஆசிரியர் ஜோஸிடம் படித்த மாணவர்களின் உதவியை நாடினார்.

இந்த தகவல் அறிந்த சக மாணவர்களும், நிதியுதவி வழங்க முன்வந்தனர். இதன்விளைவால் 24 மணி நேரத்தில் ரூ.19லட்சம் குவிந்தது.

அந்த தொகையை ஆசிரியர் ஜோஸிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினார் ஸ்டீபன்.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் தனது கருத்தை பகிர்ந்த ஜோஸ், “என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவர் மெக்சிகோவில் வசிக்கிறார்.

அவரது சிகிச்சைக்கு நிறைய பணம் தேவை. ஆனால் கொரோனாவால் எனது வேலையை இழந்துவிட்டேன்.

அமெரிக்க அரசு வழங்கும் நிவாரண தொகையை எனது மனைவிக்கு அனுப்பினேன். மீதமுள்ள பணத்தை வைத்து காரில் வாழ்க்கை நடத்தி வந்தேன்.

என்னை அடையாளம் கண்டு என்னிடம் படித்த மாணவர்கள் எனக்கு பேருதவி செய்துள்ளனர். ” எனக் கூறினார்.