ஏரியில் மூழ்கி பிரபல அமெரிக்க நடிகை உயிரிழப்பு?!

அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சி இசை, நகைச்சுவை தொடரான Gleeஇல் நடித்த நடிகை நயா ரிவேரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் பட்ரெஸ் தேசிய வனப்பகுதியிலுள்ள பிரு ஏரியில் கடந்த புதன்கிழமை தனது 4 வயது மகனுடன் படகில் பயணம் மேற்கொண்டுள்ளார் 33 வயது ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. அடுத்த சில மணி நேரங்கள் கடித்து மற்றொரு படகில் சென்ற ஒருவர் நயாவின் 4 வயது மகன் மட்டும் படகில் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்துவந்த காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினார். அதன்பிறகே படகில் சென்ற நயா காணாமல்போனது தெரியவந்தது.

Naya rivera

தானும் தன் தாயும் நீந்தச் சென்றதாக அந்த குழந்தை காவல் அதிகாரிகளிடம் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. அந்தச் சிறுவன் உயிர்க்காப்பு உடை அணிந்திருந்ததாகவும், காணாமற்போன நடிகை நயா அணியவில்லை என்றும் அதிகாரிகள் உறுதியாகக் கூறியுள்ளனர். படகை வாடகைக்கு எடுத்து சென்ற நியா, தனது மகனுடன் நீச்சல் அடித்துள்ளார். அப்போது அவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் நீரில் தனது தாயுடன் நீச்சல் அடித்த அந்த 4 வயது குழந்தை மட்டும் எப்படி படகிற்குள் வந்தான் என்பது காவலர்களுக்கே புரியாத புதிராக உள்ளது.

இருப்பினும் ஏரியில் நடிகை நயாவை தேடு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஹெலிகாப்டர் மற்றும் 100க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நயா பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக ரசிகர்களும் சகக் கலைஞர்களும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.