இந்திய பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் பைடன் திட்டம்!

modi - biden

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் சந்திப்பு நிகழவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றதிலிருந்து ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும், இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நான்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு இடையில், ஒரு சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் இணைந்து OUAD என்ற சந்திப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Biden- Modi

அதன்படி இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன், ஏற்கனவே சில விஷயங்களை பேசிவிட்டேன். பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே சந்திப்பு உறுதியானது.

இந்த சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன், சில வாரங்களுக்கு முன் ஆலோசித்தேன்” எனக் கூறினார்.

இந்த சந்திப்பே பிரதமர் நரேந்திர மோடி- அதிபர் ஜோ பைடன் இடையே நிகழப்போகும் முதல் சந்திப்பாகும்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி அவருடன் தொலைபேசியில் உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இந்திய- அமெரிக்க உறவை வலுப்படுத்த இருவரும் உறுதிபூண்டதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு பைடன் நன்றி தெரிவித்தார்.