‘புரளி’ என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்திய ட்ரம்ப்!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , புரளி என்ற வார்த்தையை கடந்த ஓராண்டில் மட்டும் 200க்கும் அதிகமான முறை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில், அதிபர் பதவி என்பது வானளாவிய அதிகாரமாக பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. அப்பேர்ப்பட்ட பதவியில் இருக்கும் தற்போது இருப்பவர் டொனால்ட் ட்ரம்ப். நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் மிகவும் பணக்கார குடும்பத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்த ட்ரம்ப், அரசியலில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் அமெரிக்காவில் முன்னனி தொழிலதிபராக அறியப்பட்டவர். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் அவரது பெயரை தாங்கி நிற்கும் வணிக வளாகங்கள் ஏராளம். இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு இவாங்கா ட்ரம்ப் உட்பட 5 குழந்தைகள் உண்டு. கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத ட்ரம்ப், நேரடியாக குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். அமெரிக்காவை சிறந்த நாடாக்க ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என ட்ரம்ப் பரப்பரை கூட்டத்தில் அடிக்கடி முழங்குவார். மிக பணக்காரராக இருப்பதாலேயோ இல்லையோ பிடிவாதமும், கர்வமும் ட்ரம்பின் ரத்தத்திலேயே ஊறியுள்ளது.

இவரது ஆட்சிக்காலத்தில் பலமுறை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் பெரும்பாலானவைக்கு அவர் அளித்த பதில் “புரளி”. அவ்வாறு செய்தியாளர் சந்திப்பின் போதும், தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளின் போதும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பெரும்பாலான முறை அது புரளி என்றே ட்ரம்ப் பதில் அளித்திருக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் 250 முறை புரளி என்ற வார்த்தையை ட்ரம்ப் பதிலாக கூறி இருக்கிறார்.