கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்காவில் பரவும் மூளையை தின்னும் கொடிய நோய்!

அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா என்ற நோய் பரவிவருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பாரோ நகரிலுள்ள ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நெக்லேரியா பெளலேரி என்ற நுண்ணிய அமீபா கிருமியானது, மூளையில் தொற்றை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்குவது போன்றவையே இந்நோயின் அறிகுறியாகும். இதுபோன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுமாறு அம்மாகண சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த நோய் தண்ணீர் மூலம் எளிதில் பரவும் என்பதால் ஆறு, ஏரி என திறந்தவெளி நீராதாரத்தை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். தண்ணீரில் வாழும் ஒரு செல் நுண்ணுயிரியான அமீபா, மனிதனின் மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்து மூளையை தாக்குகிறது. இந்நோய் கொரோனா வைரஸ் போன்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள அமெரிக்காவில் புதிதாக அமீபா தொற்று பரவி வருவது அந்நாட்டு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடாவில் 1962ம் ஆண்டே அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சமீபமாக 2009 முதல் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலும் அமீபா பாதிப்பு அதிகம் இருந்துள்ளது.