அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: ட்ரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு

Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருந்தனர்.

violence

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 6பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனால் ட்ரம்ப் மீது தகுதி நீக்க தீர்மானத்தை ஜனநாயக கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றினர். ஆனால் செனட் சபையில் ஆதரவு இல்லாததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக கடந்த மாதம் ட்ரம்ப் மீது ஜனநாயக கட்சி எம்.பி. பென்னி தாம்சன், மிசி சிப்பி மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், ட்ரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் ஜனநாயக கட்சி எம்பி எரிக் சுவால்வெல், வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மகன் டொனால்ட் ஜூனியர் மற்றும் ட்ரம்பின் வக்கீல் ரூடி கியுலியானி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், ட்ரம்ப், தனது ஆதரவாளர்களிடம், தேர்தல் திருடப்பட்டு விட்டதாக திரும்ப திரும்ப பொய்களை கூறி அமைதியான அதிகார மாற்றத்துக்கு இடையூறாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.