நியூயார்க்கில் கடுங்குளிர் ஏரியில் தத்தளித்த முதியவரை காப்பாற்றிய சென்னை இளைஞர்!

Students

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கயூகா ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை சென்னையை சேர்ந்த இளைஞர் துணிச்சலுடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சன் மணி, டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் மகள் ஆர்த்தி கிருஷ்ணாவின் மகன் ஆவார். இவரது தாய் ஆர்த்தி சுந்தரம் ஃபாஸ்டனர்சின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.

சென்னையில் பள்ளி படிப்பை முடித்த அஞ்சன், நியூயார்க்கில் தற்போது இளங்கலை பட்டய படிப்பு படித்துவருகிறார்.

How to survive falling through ice into frigid waters

விடுமுறையையொட்டி கயூகா ஏரிக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் அஞ்சன்.

அப்போது அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் தவறி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

முதியவரை கண்ட அஞ்சன், சிறிதும் தயக்கம் காட்டாமல், ஏரிக்குள் குதித்து முதியவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்ந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காவல் துறையினரும் நிகழ்விடத்திற்கு வந்து அஞ்சனை பாராட்டி போர்வை கொடுத்தனர்.

தெரியாத மனிதர் என்றாலும் ஒரு உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், உறைய வைக்கும் குளிர் நீரிலும் எப்படியாவது முதியவரைக் காப்பாற்றும் எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அஞ்சன் தெரிவித்தார்.

அஞ்சனுக்கு அவரது நண்பர்கள் மூன்று பேர் முதியவரை காப்பாற்ற உதவி செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.