வரலாறு காணாத பனிப்புயல்! டெக்சாஸில் 23 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பனிப்புயலால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, கெண்டக்கி, மிசெளரி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்புயல் நிலவிவருகிறது.

பனிப்புயலால் மின் வயர்களில் பனி உறைந்துள்ளதால் அங்கு கடந்த 2 நாட்களாக மின்சாரமின்றி 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்துவருகின்றனர்.

தண்ணீர் குழாய்கள் உறைந்ததால் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கடுமையான குளிரால் கொரோனா தடுப்பூசி விநியோகமும் தடைப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 (AP)

டெஸ்சாஸ் மாநிலத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ள பைடன், அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சாலைகளில் பனிக்கட்டிகள் தேங்கிக்கிடப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கியுள்ளது. நீர்வீழ்ச்சிகள் பனிசிற்பங்களாக மாறியுள்ளன.

கொரோனா தடுப்பூசிகளை அதற்கான உரிய வெப்பநிலையில் வைக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் சுகாதார அதிகாரிகள் செய்வதறியாது திணறிவருகின்றனர்.

இந்த வார இறுதிவரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.

மின்சாரத்தை உற்பத்தி நிறுவனங்கள் முடங்கியுள்ளன. நிலக்கரி, இயற்கை வாயு, காற்றாலை மூலமும் மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.