இனி என்ன செய்ய போகிறார் ட்ரம்ப்?

தேர்தல் தோல்வியை ஏற்க மனமில்லாமல் பல சவால்களுடன் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அவரது எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது கணிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

2017, ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக அரியணை ஏறினார் மிகப்பெரிய தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்..

நான்காண்டு காலம் அமெரிக்கா அதிபராக பல சர்ச்சைகளையும் சவால்களையும் எதிர்கொண்டார். தொழிலதிபராக வெற்றி கண்ட ட்ரம்பால் மக்கள் பிரதிநிதியாக சரிவர இயங்கமுடியவில்லை.

சர்வதேச அரசியலை கையாண்ட விதம் கொரோனா தொற்றை எதிர்கொண்ட போக்கு இவை எல்லாம் ட்ரம்புக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கை குறைத்து விட்டது.

விளைவு தேர்தலில் ஏற்பட்ட தோல்வி. ஆனால் இதுவரை தான் தோல்வி அடைந்ததை ட்ரம்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அது தவிர ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் அவர் மீது மேலும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இதனால் இரண்டாவது முறையாக பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதிபர் என்ற அவப்பெயருக்கு ட்ரம்ப் ஆளாகிவிட்டார்.

இது போக ட்ரம்பின் அனைத்து சமூகவலைதள பக்கங்களும் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ முடக்கப்பட்டுவிட்டன.

இதனால் கடந்த ஒரு வாரமாகவே ட்ரம்ப் கோபமாகவே காணப்பட்டதாக கூறுகின்றனர் வெள்ளை மாளிகை அதிகாரிகள்.

trump

குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கையில் குறிப்பாக , ட்ரம்ப் தனிமையிலேயே நாட்களை கழித்ததாக கூறுகின்றனர் ஊழியர்கள். மைக் பென்ஸுடன் ஏற்பட்ட மனஸ்தாபம், சொந்த கட்சியினரே பகையான சூழல், போன்றவை ட்ரம்பை மேலும் வருத்தமடைய செய்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு பின் ட்ரம்பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி தொடர்ந்து நீடிக்கிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் இருப்பதால் ட்ரம்ப் அவற்றை எப்படி எதிர்கொள்ள போகிறார்? அவரது செல்வாக்கு குறைந்திருப்பது தொழில்களை மேலும் பாதிக்கும் என கணிக்கபப்டுவதால் அதனை சரி செய்ய என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெள்ளைமாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள இல்லத்தில் ட்ரம்ப் குடியேற இருக்கிறார். பதவி நீக்க தீர்மானம் ட்ரம்பின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதால் மீண்டும் ரியஸ் எஸ்டேட் உள்ளிட்ட தொழல்களை ட்ரம்ப் கவனிப்பார் எனச் சொல்லப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட சில வழக்குகளில் அவர் சிறைக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பை பொறுத்தவரை எதிர்காலம் என்பது சவால்கள் நிறைந்ததாகவே இருக்க போகிறது.

இதையும் படிக்கலாமே: முடிவுக்கு வந்தது ட்ரம்பின் சகாப்தம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter