அதகளப்படும் அமெரிக்கா! ஒருபக்கம் கொண்டாட்டம், மறுபக்கம் போராட்டம்

Celebration

உலகமே எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து நான்கு நாட்களாகியும் அதிபர் யார் என்பது இதுவரை உறுதிபட அறிவிக்க முடியவில்லை.

முன் எப்போதும் இல்லாத வகையில் தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவானதே முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அரிசோனா, வடக்கு கரோலினா, நேவாடா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டாலும், முக்கிய மாநிலமான பென்சில்வேனியாவில், பைடனின் கரமே ஓங்கியிருக்கிறது.

ஏறக்குறைய அங்கு 98 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான வாய்ப்பு பைடனுக்கே பிரகாசமாகியிருக்கிறது.

பென்சில்வேனியாவில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் பெரும்பான்மையை விட, கூடுதலான வாக்குகளை அவர் பெறக்கூடும்.

இதனால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள பைடன் ஆதரவாளர்கள், பென்சில்வேனியாவின், ஃபிலாடெல்பியா நகரில் ஒன்று கூடி, ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர்.

us protests
Credits: SkyNews

இதற்கு நேர்மாறாக டெட்ராய்ட் நகரில் ஒன்று கூடிய ட்ரம்பின் ஆதரவாளர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தியபடி வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக பேரணி நடத்தினர்.

அதிபர் பதவியை ட்ரம்பிடம் இருந்து முறைகேடான முறையில், பைடன் திருடிவிட்டார் என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

ட்ரம்பின் பரப்புரை குழுவினரும், இந்த தோல்வியை ஏற்கவில்லை. நான்கு மாநிலங்களிலும் பைடனே முன்னிலையில் இருப்பதாக ஒரு மாயத் தோற்றும் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், இறுதி முடிவுகள் வேறு மாதரியாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தவிர, ஜார்ஜியாவில் நடந்து வரும் மறுவாக்கு எண்ணிக்கையிலும், ட்ரம்புக்கே நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் ஆணித்தரமாக.

அதே நேரம் பைடன் தரப்பினரோ, இத்தகைய சூழல் ஜனநாயகத்திற்கு அழகல்ல என விமர்சிக்கின்றனர்.

நிலைமை இப்படியே சென்றால் வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்பை குண்டுகட்டாக தான் வெளியேற்ற வேண்டி வரலாம் என்றும் காட்டமாக தெரிவிக்கின்றனர்.

வெள்ளை மாளிகை யார் வசம் ஆகும்? ட்ரம்ப் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை அனுமதிப்பாரா? அல்லது மறுவாக்கு எண்ணிக்கையில் நிலவரங்கள் மாறுமா? என்பதை காலச்சக்கரம் தான் முடிவு செய்யும்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம்! அமைதி காக்க பைடன் வேண்டுகோள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter