பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது அமெரிக்கா!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்று முதல் மீண்டும் அமெரிக்கா இணைந்துள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவது புவிவெப்பமயமாதல். இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் குறைவதற்காக பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 196 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்த அமெரிக்கா, ட்ரம்புக்கு ஆட்சிக்கு வந்த பின் அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகியது.

வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தால் நிறைய செலவு ஆவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். அதுமட்டுமின்றி, அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதனிடையே புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

Biden

தேர்தல் வாக்குறுதியிலேயே பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இணைவது, மெக்சிகோ சுவர் கட்டுமானம் நிறுத்தம், குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது போன்றவற்றில் கையெழுத்திடுவேன் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக அறிவித்தார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு நாட்டு தூதர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 200 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.