சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: ட்ரம்ப் VS ஜோபிடன்! விவாதம் எப்போது?

அமெரிக்க அதிபர் பதவிக்கான மூன்று விவாதங்களின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தெதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். கொரோனா உள்பட பல்வேறு பிரச்னைகளில் டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 2016 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தனக்கு எதிராக இருந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் அதனை பொய்யாக்கியதாகக் கூறும் ட்ரம்ப் தரப்பு, தற்போதும் அப்படியே நடக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

US polls

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பதவிக்கான மூன்று விவாதங்களில், முதலாவது விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி ஓஹியோவில் நடைபெறுகிறது. இரண்டாவது விவாதம் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியும் மூன்றாவது விவாதம் 22 ஆம் தேதி நஷ்வில்லே நகரிலும் நடைபெறவுள்ளது. துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விவாதம் உட்டாஹ்-மாநிலத்தில் உள்ள Salt Lake City நகரில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதங்களை கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் மற்றும் கிளீவ்லேண்ட் கிளினிக் இணைந்து வழங்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடெனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த ட்ரம்ப்!! வெளியானது புதிய கருத்துக்கணிப்பு