ஹெச் 4 விசா: ட்ரம்ப் விதித்த தடையை ரத்து செய்தார் பைடன்

ஹெச்1 பி விசா மூலம் வேலை செய்யும் இந்தியரின் வாழ்க்கைத் துணைகளுக்கு வழங்கப்படும் ஹெச் 4 என்ற வேலை உறுதி விசாவுக்கு இருந்த சிக்கல் நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு ஹெச் 1 பி விசா வழங்கப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முன்னிலையில் உள்ளன.

அங்கு ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்று பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு ஹெச் 4 விசாக்களுடன் வேலை வழங்கப்பட்டுவந்தது.

ஹெச் 4 விசா முறையை, அதிபராக இருந்த, பராக் ஒபாமா, 2015ல் அறிமுகம் செய்தார். அதற்கு முன், எச் 1 பி விசா பெற்றவர்களின் மனைவி அல்லது கணவருக்கு, வேலை பார்ப்பதற்கான சட்டப்பூர்வமான அனுமதி கிடையாது.

இதனிடையே அமெரிக்கர்களின் நலனை கருத்தில்கொண்டு ஹெச்1பி விசாக்களையும் ஹெச் 4 விசாக்களையும் இந்த ஆண்டு இறுதிவரை விநியோகிக்க தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இதனால் இந்தியர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்தனர். அமெரிக்காவின்ஹெச்1 பி விசா பெறுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி அங்கீகார காலத்தை நீட்டிக்கக்கோரி அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கு 60 எம்பிக்கள் கடிதம் எழுதினர்.

இந்நிலையில் ஹெச் 4 விசா பெற்றவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற ட்ரம்பின் உத்தரவு’நீக்கப்பட்டது என்ற ஒற்றை வார்த்தையில் ரத்து செய்து உள்ளார் அதிபர் ஜோ பைடன்.

இதன் மூலம், ஹெச் 1 பி விசா நடைமுறையில் உள்ள சிக்கல்கள், ‘கிரீன் கார்டு’ எனப்படும் குடியுரிமை வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸ், “ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த ஹெச்4 விசா தடையால் திறமையான மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வேலைவாய்ப்பு கேள்விக்குறியானது.

குறிப்பாக பெண்கள் இந்த தடையால் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது பதவியேற்ற புதிய அரசு, ட்ரம்பின் தடை நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: தமிழர்களுக்கு கிடைத்த உயரிய பதவி!