”சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம்”

kamala harris

சமூக வலைதளங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினரான மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 2 ஆம் தேதி உலக பிரபல பாப் பாடகியான ரிஹானா, போராட்டத்திற்கு ஆதரவாகவும், கலவரத்தில் போராட்டக்குழுவினர் தாக்கப்படும் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ட்வீட்டால் விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், லெபனானைச் சேர்ந்த மியா கலிஃபா, அமெரிக்க துணை அதிபரின் உறவினரான மீனா ஹாரிஸ் ஆகியோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா போலவே மிக பெரிய ஜனநாய நாடும் தற்போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. போராட்டத்தின்போது விவசாயிகளை துணை ராணுவப்படை தாக்கியது கண்டனத்திற்குரியது” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், உங்களை பிரபலப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் பெயரை சமூக வலைதளங்களிலோ, வணிகரீதியாகவோ பயன்படுத்த வேண்டாம் என மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.