வீடு திரும்பினார் அதிபர் ட்ரம்ப்! இன்னும் 10 நாட்களுக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு!

Trump

கொரோனா தொற்றால் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனக்கூறும் மருத்துவர்கள், அதிபர் என்பதலாயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீடு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயதானவர் என்பதால் ஹை ரிஸ்க் பட்டியலில் ட்ரம்ப் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து முகக் கவசம் அணிந்தவாறு நடந்தே வெளியே வந்த ட்ரம்ப், காரில் ஏறி சிறிது தூரம் சென்று பின் அங்கிருந்த கடற்படை ஹெலிகாப்டரில் ஏறி வெள்ளை மாளிகையை அடைந்தார். அங்கு முகக் கவசத்தை அகற்றி விட்டு புகைப்படங்களுக்கு போஸ் தந்தார். அப்போது அவருக்கு பெருமூச்சு வாங்கி‌யது. அதிலிருந்தே அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பது தெளிவாக தெரிந்தது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமளவுக்கு அவரது உடல் நிலை தேறிவிட்டதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 72 மணி நேரமாக அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Trump
Image: BBC

அதேநேரத்தில், ட்ரம்ப் இடத்தில் வேறு யாரேனும் இருந்தால் நிச்சயம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்திருக்க மாட்டோம் என அவருக்கு சிகிச்சை அளித்த பிரவுன் பல்கலைக்கழக மருத்துவரும் பொது சுகாதார ஆராய்ச்சியாளருமான டாக்டர் மேகன் ரான்னி தெரிவித்துள்ளார். நம்மில் பெரும்பாலோருக்கு 24 மணிநேரமும் வீட்டு சுகாதாரப் பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை என்றும் அதிபர் ட்ரம்பின் சூழ்நிலையோ வேறு என்றும் மருத்துவர் மேகன் விளக்கமளித்துள்ளார். அதிபர் ட்ரம்புக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது எனக்கூறும் மருத்துவக்குழு, வெள்ளை மாளிகையிலும் அவருக்கு முழு மருத்துவ வசதி கிடைக்கும் என்றும், அங்கு அதிபர் ட்ரம்ப் முழு நேரமும் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்புக்கு இன்னும் 10 நாட்களுக்கு தொற்று இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதுவரை அவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே:  ட்ரம்ப் மரணிக்க வேண்டும் என்று கோரும் ட்வீட்டுக்கள் நீக்கப்படும்: ட்விட்டர்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter