சீனாவிலிருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா- ட்ரம்ப் விமர்சனமும் கிண்டலும்…

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 28 லட்சத்து 36 ஆயிரத்து 875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும். வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.


இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 56 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்படத் துவங்கிய நாள் முதல், ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் இதற்கு முன் ஏற்படவில்லை. இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர், “கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய். கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவாமல் சீனா தடுத்திருக்கலாம். ஆனால் சீனா வேண்டுமென்றே நோயை பரப்பியது. சீனாவுடன் அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு அது பரவிவிட்டது” என்றார். முன்னதாக அதிபர் ட்ரம்ப் குங்ஃபூளு என கொரோனா வைரஸ்க்கு பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தான் செய்யும் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். கொரோனா தொற்று வேகமாக பரவியிருந்தாலும் முகக்கவசத்தை கட்டாயமாக்க சட்டம் பிறப்பிக்க மாட்டேன் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்த் துறை இயக்குநர், டாக்டர் ஆண்டனி பவுசி, ‘வேகமாகப் பரவிவரும் வைரசைத் தடுக்க, கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தினசரி கண்டறியப்படும் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தைக் கடக்கும்’ என எச்சரித்துள்ளார். இவரது கருத்தை கிண்டல் செய்யும் வகையில், அதிபர் டிரம்ப், ‘நான் எப்போதும் இருண்ட கறுப்பு முகக் கவசத்தை அணித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அப்படி ஒரு முகக்கவசத்தை அணிந்தால் தி லோன் ரேஞ்சர் போல இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். சிலர் லோன் ரேஞ்சர் மூக்கில் முகக்கவசத்தை அணிந்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுவருகின்றனர்.